பிசாசு - Pisasu (2014)

    Note: Spoilers ahead!                  

    ஏசு கிறிஸ்து ஒரு மனிதனாக இருந்து தெய்வத்தின் நிலைக்கு உயரும்  தருணங்கள் பைபிளில் சில  உண்டு. அதில் ஒன்று,அவரை ரோம சாம்ராஜ்ய காவலாளிகளும், யூதேயா நகர மக்களும், முள் கிரீடத்தோடு  சிலுவையில் அறைந்து  தொங்க விடும் போது வருகிறது. சிலுவை ரத்தம் சொட்ட சொட்ட தொங்கும் பொது, அவர் வானைப் பார்த்து சொல்கிறார் "பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என்று. மரண வலியில் தன் உயிர் போகும் , தருணத்தில் கூட , தன்னை கொல்பவர்களின் அறியாமைக்காக இறங்கி வேண்டும் தருணத்தில் அவர் தெய்வமாகிறார்.
                         
  தெய்வத்தின் நேர் எதிராக பைபிள் சொல்வது பிசாசு. அந்த பிசாசு என்கிற குறியீட்டை எடுத்து மிஷ்கின் சொல்லும் கதையில் வரும் பிசாசு எப்படிப் பட்டதாக இருக்கிறது ? அதற்க்கு கொஞ்சம் மாயாஜாலங்கள் தெரிகிறது, ஓர்  வீட்டுக்குள் புகைக் கூண்டில் புகுந்து வாழும் அதற்க்கு,  வெளியில் நடக்கும் அநீதிகளை பார்க்கும் திறன் இல்லை. ஆனால், அந்த அநீதிகள் தன் வீட்டுக்குள் வந்து வீட்டில் உள்ளவர்களை சீண்டும் போது, அது ருத்ர தாண்டவம் கொண்டு, தப்பு செய்யும் ஆசாமிகளை உண்டு இல்லை என்று கிழித்து தோரணம் கட்டி விடுகிறது. விட்டில் உள்ளவர்கள் மேல் அதற்க்கு நிறைய அன்பும் அக்கறையும் இருக்கிறது. ஆனால் எல்லையில்லா தனிமையும்  இருக்கிறது.சுருக்கமாக சொன்னால் அது பேரன்பும், பெருங்கோபமும் கொண்ட ஒரு தாயின் உருவம்.

              
மிஷ்கின் ஒரு பேட்டியில், நாம் அமானுஷ்யத்தை ஒன்று கடவுள் என்கிறோம் அல்லது பூதம் என்கிறோம் என்று சொல்கிறார். அது உண்மைதான். ஆனால்,பொதுவாக இந்த உலகத்திற்கு தெய்வத்தையும் பிசாசையும் பிரித்து புரிந்து கொள்ள திறனில்லை. ஏனென்றால் அது படத்தின் நாயகன் போல ஒரு கண்ணால் மட்டுமே எல்லாவற்றையும் பார்க்கிறது. நாயகன் பார்த்து பயந்து பிசாசு என்று நினைக்கும் அந்த உருவம் ஏன் தெய்வமாக இருக்கக் கூடாது என்பதே இப்படத்தின் முக்கிய புள்ளி(theme)

படத்தின் முடிவிலும் , பிசாசு தெய்வம் என்றே கதாநாயகியின் பெயர் வருகிறது. அப்படியானால்  இந்த பிசாசு எப்போது தெய்வமாக மாறுகிறது?  என்னதான் அநீதிக்கு பொங்கினாலும்,அதெல்லாம், தன் சூழலில் நடக்கும் அநீதிகள் மட்டுமே. அதெல்லாம் அதை ஒரு நல்ல தாயின் உருவமாக மட்டுமே காட்டுகிறதே தவிர தெய்வத்தின் வடிவமாக அல்ல. ஆனால், அது எப்போது தன்னை கொன்றவனை மன்னித்து, அவன் மேல் அளவில்லா அன்பு வைக்கிறதோ, அப்போதே அது தெய்வத்தின் நிலைக்கு உயர்ந்து விட்டது. கடைசியில் தன் இருப்பே அதன் தந்தைக்கும் நாயகனுக்கும் துன்பமாக மாறும்போது, தன் இருப்பையும் அழித்து காற்றோடு மறைகிறது.

              இது ஒரு குழப்பமான நிலைதான்.  இவ்வளவு அன்பான பிசாசு தெய்வம்தான், நாயகனின் தாயை தாக்கியவனை கொலை வெறியோடு தாக்குகிறது. வீட்டில் திருட வருபவன் குதத்தில் கத்தியைச்  சொருகி கதவை சாத்துகிறது, சூனிய காரியின் தலையை உலுப்பி எடுக்கிறது. ஏனென்றால், அதன் நோக்கில் அவர்களை கொல்லாமல் விட்டதே மன்னிப்புதான். ஆனால் அது நாயகனை பரி பூரணமாக மன்னிகிறதே? ஏனென்றால் அவன் அந்த மன்னிப்புக்கு தகுதியானவனாக இருக்கிறான். அவனுக்கு ஒரு நீதியுணர்ச்சி இருக்கிறது. அவன் பிச்சை எடுப்பவர்களுக்காக உயிரைக் கொடுத்து சண்டை போடுகிறான். அவனுக்கு ஒரு தந்தையின் மனம் புரிகிறது. "நமக்கு பிணம் ஆனால் அவருக்கு அது அவள் மகள்" என்று நண்பனோடு வாதிடுகிறான். இதற்கெல்லாம் மேலாக, தன தவறை உணரும் தருணத்தில் அவன் ஓடி ஒழியவில்லை, மாறாக அவன் தன் தவறுக்காக உயிரை விடவும் தயாராகிறான். இதெல்லாம் நமக்குத்தான் மிஷ்கின் காட்டுகிறார். ஆனால் பிசாசை பொருத்தவரை, அவன் எப்போது பிச்சை எடுப்பவர்களுக்காக சிறிது நேரம் வாழ்கிறான் என்று தெரிகிறதோ அப்போதே அவனை மன்னித்து அவன் மேல் காதல் கொண்டு அவன் பின்னால் வந்து விடுகிறது.


No comments:

Post a Comment

Please provide your name, so that i can know who you are. Thanks!